search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெரினா சாலை"

    தமிழகம் முழுவதும் அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டம் 4வது நாளாக நீடித்து வரும் நிலையில் மெரினா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். #JactoGeo
    சென்னை:

    அரசு ஊழியர்-ஆசிரியர்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இன்று 4-வது நாளாக தமிழகம் முழுவதும் நீடிக்கிறது.

    போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அதையும் மீறி போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர்.

    அதன்படி இன்று அரசு ஊழியர்-ஆசிரியர்கள் மறியல் போராட்டம் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடந்தது. சென்னையில் எழிலகம் அருகில் ஆயிரத்திற்கும் மேலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒன்று திரண்டனர்.

    ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு, மாயவன், வெங்கடேசன், தியாகராஜன், தாஸ் ஆகியோர் தலைமையில் திரண்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர். எந்த நிலையிலும் போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று அறிவித்தனர்.

    நாளை குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில் ஆசிரியர்கள் போராட்டம் பள்ளி மாணவர்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிகளை திறந்து தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவது வழக்கமாகும். இந்நாளில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவதும் உண்டு.

    ஆனால் தமிழகத்தில் நடைபெற்று வரும் வேலைநிறுத்தத்தால் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நகர்ப்புறங்களைவிட கிராமப் பகுதியை சேர்ந்த பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களின் கல்வி கற்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

    அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்து தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    எழிலகம் வளாகத்தில் அமர்ந்து சிறிதுநேரம் போராட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் பேசினார்கள். பின்னர் மறியல் செய்வதற்காக காமராஜர் சாலைக்கு செல்ல முயன்றனர். அவர்களை சாலை பகுதிக்கு விடாமல் போலீசார் தடுப்பு வேலி அமைத்தும், கயிறு கட்டியும் வைத்து இருந்தனர்.

    ஆனால் அதையும் மீறி தடுப்பு வேலிமேல் குதித்து மெரினா சாலையில் உட்கார்ந்தனர். போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி அரசு ஊழியர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் அமர்ந்து அரசு ஊழியர்களை போலீசார் வெளியேற்ற முயன்றனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்ல மறுத்தனர். இதனால் போலீசார் சாலையில் அமர்ந்து மறியல் செய்த ஊழியர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று போலீஸ் வேனில் ஏற்றினர். மற்றவர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டனர்.

    மதுரை ஐகோர்ட்டில் திங்கட்கிழமை அன்று வழக்கு விசாரணைக்கு வருகிறது. பணிக்கு திரும்பவேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

    அதேநேரத்தில் அரசையும், அரசு ஊழியர் பிரச்சினையை முறையாக அணுக வேண்டும் என்று கூறியுள்ளது. கோர்ட்டின் உத்தரவை மீறவில்லை. எங்களது நியாயமான கோர்க்கையை நிறைவேற்றித்தர வேண்டும் என இப்போது போராடவில்லை. 2 ஆண்டுகளுக்கு மேலாக அரசை வலியுறுத்தி வருகிறோம்.

    இந்த பிரச்சினையை தீர்க்காமல் காலம் கடத்தி வந்தது அரசின் தவறு. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அதற்கு நாங்கள் காரணம் அல்ல. அரசுதான் பொறுப்பு. மாணவர்கள் நலனில் எங்களுக்கு அக்கறை அதிகம் உள்ளது. எங்களைவிட அவர்கள் மீது அக்கறைப்பட யாராலும் முடியாது.

    தேர்வு நேரத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்யவில்லை. கஜா புயல் பாதிப்பு என்று கூறி பிரச்சினையை தள்ளி வைத்துவிட்டது. மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி இந்த பாதிப்பை ஈடுசெய்ய எங்களால் முடியும். அரசின் தவறான முடிவால்தான் இந்த பிரச்சினை. எங்கள் போராட்டம் தொடரும். அரசு அழைத்து பேசி தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #JactoGeo

    ×